சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் திடீர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைவதுடன், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரி கூறியதாவது:- கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் டீசல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தற்காலிகமானது தான். விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். இவ்வாறு அதிகாரி கூறினார்.