சென்னையில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகை சந்திப்பு அருகிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக் கிடமாக வந்த ஆட்டோவை போலீசார் மடக்கி சோதனை இட்டனர். அதில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 13 பார்சல்கள் இருந்தன. இதுபற்றி ஆட்டோவில் வந்தர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஆட்டோவில் தங்கம் கடத்தி வரப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 13 பெட்டிகளிலும் தங்கத்தை மறைத்து வைத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டோவையும், ஆட்டோவில் வந்த 2 பேரையும் எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் ஆட்டோவில் தங்கத்தை கடத்தி வந்த இருவரின் பெயர் விவரங்கள் தெரிய வந்தன. ஒருவரது பெயர் பரத்லால். இன்னொருவர் ராகுல். ராஜஸ்தானை சேர்ந்த இருவரும் சென்னையில் தங்கி இருந்து பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
மும்பையில் இருந்து விமானத்தில் பார்சல் வடிவில் 20 கிலோ தங்கமும் கடத்தி வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள பார்சல் நிறுவனத்துக்கு பரத்லாலும், ராகுலும் தங்கத்தை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பார்சல் நிறுவன உரிமையாளரான குல்தீப் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 20 கிலோ தங்கத்துக்கும் உரிய கணக்கு எதையும் ஆட்டோவில் வந்தவர்கள் காட்டவில்லை.
இதையடுத்து கடத்தல் தங்கத்தை கைப்பற்றிய போலீசார் அதன் முழு பின்னணி குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கம் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் இருந்து 20 கிலோ தங்கத்தை அனுப்பி வைத்தது யார்? இங்கு யாருக்காக இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.