சென்னையில் நூதனமுறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றிக்கொடுத்து மக்களிடம் பணம் கொள்ளையடித்துவந்த மத்திய அரசு ஊழியர் சிக்கினார். அவரிடம் இருந்து 271 போலி கார்டுகளை பறிமுதல் செய்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது பண பரிமாற்றம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஏடிஎம் மற்றும் ஆன் லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பணம் பரிமாற்றம் செய்வதால் மோசடி குறைந்துள்ள நிலையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் மோசடி செய்யும் சம்பவமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் பலரும் ஏடிஎம் கார்டுகளை முறையாக பயன்படுத்த தெரியாமல் அடுத்தவர் உதவியுடன் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் மக்களை குறிவைக்கும் கும்பல், ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை வாங்கி பணம் எடுத்து தருவதுபோல எடுத்து கொடுத்துவிட்டு அவர்களது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பிவிடுகின்றனர். இதன்பிறகு அந்த ஏடிஎம் கார்டை கொண்டு மீண்டும் பணம் எடுக்க வரும்போது அது போலியானது என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைகின்றனர். எவ்வளவுதான் வங்கி, போலீசார் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் ஏதாவது ஒரு வழியில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏடிஎம் கார்டு மோசடி மூலம் சென்னையை கலக்கிய பலே திருடனை எம்கேபி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் மத்திய அரசு ஊழியர் என்பது மேலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னை எம்கேபி. நகர் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் (24). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த 6ம்தேதி எம்கேபி.நகர் அம்பேத்கர் கல்லூரி சாலை எதிரே உள்ள ஏடிஎம்முக்கு சென்று தனது புதிய கார்டை மெஷினில் செலுத்தி புதிய பின் நம்பரை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு ஜாக்குலினுக்கு பின்னால் நின்றிருந்த நபரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து அவரது ஏடிஎம் கார்டை வாங்கிய அந்த நபர், புதிய பின் நம்பரை தயார் செய்து கொடுத்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார். இதன்பிறகு ஜாக்குலினும் அங்கிருந்து சென்று விட்டார்.
இதன்பிறகு அவரது மொபைல் போனுக்கு 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என்று எஸ்எம்எஸ் வந்ததும் ஜாக்குலின் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு கேட்டபோது அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் எந்த வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் விவரமாக தெரிவித்துள்ளனர். இதன்பிறகு தன்னிடம் இருந்த ஏடிஎம் கார்டை சரிபார்த்தபோது அதே வங்கியை சேர்ந்த வேறு ஒரு நபரின் போலி ஏடிஎம் கார்டு என்பது தெரியவந்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து எம்கேபி.நகர் குற்றப்பிரிவில் ஜாக்குலின் புகார் அளித்தார். சென்னை முழுவதும் ஏடிஎம் மையங்களுக்கு வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் உரிய முறையில் விசாரிக்கவேண்டும் என்று புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து எம்கேபி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வர்கீஸ் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சென்னையில் உள்ள அனைத்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், எம்பிகே. நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் மாஸ்க் அணிந்த 40 வயது நபர் ஒருவர், ஜாக்குலினுக்கு உதவி செய்வது போன்று செய்து தனது பாக்கெட்டில் இருந்த ஏடிஎம் கார்டை மாற்றி கொடுப்பது தெளிவாக பதிவாகியிருந்தது. சிசிடிவி கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவரை விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர், சென்னை பெரம்பூர் பாரதி ரோடு பகுதியை சேர்ந்த பிரபு (55) என்று தெரிந்தது.
இதையடுத்து இன்று காலை இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையிலான போலீசார் அவரது வீட்டுக்கு சென்று பிரபுவை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை போட்டபோது 270 போலி ஏடிஎம் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், கடைசியாக ஜாக்குலினிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஏடிஎம் கார்டு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்தது. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 271 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பிறகு பிரபுவை காவல்நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.
ஏடிஎம் மையங்களில் யாருக்கெல்லாம் பின் நம்பர் போட்டு பணம் எடுக்க தெரியவில்லையோ அவர்களுக்கு பாஸ்வேர்டு போட்டு பணம் எடுத்து கொடுத்துவிட்டு அவர்கள் பணத்தை எண்ணும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அதே வங்கி ஏடிஎம் கார்டை அவர்களுக்கு கொடுத்துவிட்டு சந்தேகம் இல்லாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இதன்பின்பு அதே ஏடிஎம் கார்டை வேறு ஏடிஎம் மையத்தில் போட்டு பணம் எடுத்து மோசடி செய்துள்ளார். பிரபு ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஆவடி டேங்க் பேக்டரியில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிரபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர் ஒருவர், நூதன முறையில் ஏடிஎம் கார்டில் பணம் மோசடி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முழுவதும் கைவரிசை காட்டிய பிரபு, அடிக்கடி வெளியூர்களுக்கு தனது குடும்பத்துடன் சென்றுவந்துள்ளார். பிரபுவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என்று தெரியாமல் தொடர்ந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும்போது கொள்ளையடிக்க துவங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதியவர்களை ஏமாற்றி நூதன முறையில் ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டிய 3 வட மாநில இளைஞர்களை கைது செய்து 60 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். தற்போது ஏடிஎம் மோசடியில் மத்திய அரசு ஊழியரை கைது செய்து அவரிடம் இருந்து 271 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏடிஎம் முதல் வீடு வரை: ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பிடிபட்ட பிரபு ஏடிஎம் மையம் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் 10 மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தியுள்ளது தெரிய வந்தது. இதனால் அவர் வண்டியை எடுத்துக்கொண்டு தனது வீடு வரை உள்ள 40 சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கண்காணித்துள்ளனர். ஒவ்வொரு கேமராவிலும் அவர் செல்வது பதிவாகியிருந்தது. ஆனால் வண்டியின் நம்பரை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக பெரம்பூரில் ஒரு பகுதியில் அவரது வண்டி நின்றுள்ளது. இதன் அடிப்படையில் பிரபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏடிஎம் கார்டு சேகரிப்பு: இந்தியன் வங்கி ஏடிஎம்முக்கு செல்வதாக இருந்தால் அதே இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டுகளை கையில் எடுத்துச் செல்வாராம். வேறு வங்கியில் இருந்து குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் பெரும்பாலான நபர்கள் அதே வங்கியில் பணம் எடுக்கின்றனர். அப்போது ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்தால் அவர்களுக்கு சந்தேகம் வரும் என்பதால் எந்த வங்கிக்கு ஏமாற்ற செல்கிறாரோ அதே வங்கி ஏடிஎம் கார்டுகளை கொண்டு சென்றுள்ளார். இதற்காக ஏடிஎம் வங்கியில் தவற விடப்படும் கார்டுகள் மற்றும் குப்பையில் கிடக்கும் பழைய பயன்படாத ஏடிஎம் கார்டுகளை சேகரித்து தனியாக வைத்துள்ளார்.