பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முற்றிலும் மக்கள் சேவை நிகழ்ச்சிகள், இளைஞர்கள், மாணவர்களை ஊக்கு வித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் சேவை நிகழ்ச்சிகள் நடந்தன.
மத்திய மீன்வளத் துறை சார்பாக சர்வதேச கடல் தூய்மை படுத்துதல் தினமாக கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி பெசன்ட் நகர் ஆல்காட் அரசு பள்ளி முன்பிருந்து அடையாறு பாலம் வரையில் 6 கிலோ மீட்டர் தூர, மினி மாரத் தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியை தொடங்கி வைத்து பொது மக்களுடன் ஓடினார். அவருடன் பா.ஜனதா மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அவரே கடற்கரையில் சிதறி கிடந்த குப்பைகள், தண்ணீர் பாட்டில்களை சேகரித்து அகற்றினார். அதன் பிறகு பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் 720 பேர் ரத்த தானம் செய்தனர். அதை எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் வில்வ மரக் கன்று ஒன்றை நட்டார். பின்னர் ஆவடியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.