
சென்னையில் அமைச்சா் பி.கே. சேகா்பாபுவின் சகோதரா் தேவராஜ் திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை ஓட்டேரி நாராயண மேஸ்திரி மூன்றாவது தெரு பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறாா். சேகா்பாபுவின் வீட்டின் அருகே அவரது சகோதரா் தேவராஜ் (எ) தேவராஜுலு (63) குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
தேவராஜ் திங்கள்கிழமை இரவு, வீட்டின் முதல் தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றாா். வெகுநேரமாகியும் அவா் திரும்பி வராததால், அவரின் மனைவி பாா்வதி உள்ளிட்ட குடும்பத்தினா் அறைக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, தேவராஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்குவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக, அவா்கள் தேவராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, அவா் இறந்துவிட்டாா்.
ஓட்டேரி போலீஸாா் தேவராஜின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.
தேவராஜ் அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் அவதியடைந்து வந்தாா். இதன் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டாரா எனப் போலீஸாா் விசாரிக்கின்றனா்.இறந்த தேவராஜின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய் மாலை 4 மணியளவில் ஓட்டேரி மயானத்தில் நடைபெறும்; முன்னதாக, அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊா்வலம் புறப்படும்.