ஒருதலைக் காதல் கேரள இளம்பெண்ணின் முகத்தில் 25 முறை பாட்டிலால் கிழித்த சென்னை வாலிபரை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சோனுவை பரிசோதித்த டாக்டர்கள் 25 இடங்களில் காயம் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தையல் போடப்பட்டு சோனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு. 20 வயது இளம்பெண்ணான இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருகிறார். ஓட்டல் அருகிலேயே விடுதியில் தங்கி உள்ளார். சோனுவுக்கும் சென்னையை சேர்ந்த நவீன் என்ற வாலிபருக்கும் இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர்.
கப்பல் படையில் வேலை செய்வதாக நவீன் கூறியுள்ளார். சோனு, நவீனுடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார். ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட நவீன், சோனுவை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்த காதலை சோனுவிடம், நவீன் வெளிப்படுத்தி உள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சோனு, கொஞ்சம் கொஞ்சமாக நவீனை விட்டு விலகியுள்ளார். இது நவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சோனுவுக்கு போன் செய்து நவீன் மிரட்டலும் விடுத்துள்ளார்.
அப்போது தன்னை காதலிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியை முடித்துவிட்டு சோனு அருகில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோனுவை வழிமறித்த நவீன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக குத்தினார். சோனுவின் முகத்தை சிதைக்கும் எண்ணத்தில் பல இடங்களில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சோனு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார்.
இதைபார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் பயந்து போன நவீன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சோனுவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சோனுவை பரிசோதித்த டாக்டர்கள் 25 இடங்களில் காயம் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு தையல் போடப்பட்டு சோனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நவீனை அடையாளம் கண்டு கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சோனுவை நவீன் திட்டமிட்டு தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
சோனு வேலை செய்த ஓட்டலுக்கு முன் கூட்டியே வந்து காத்திருந்த நவீன் வேலை முடித்து சோனு விடுதிக்கு சென்ற போது பின்தொடர்ந்து சென்று கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது. இதற்காக பல நாட்கள் நவீன் திட்டமிட்டதும் அம்பலமாகி உள்ளது. சோனுவின் முகத்தில் குத்துவதற்காக காலி மதுபாட்டில் ஒன்றை நவீன் பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனுவை கொலை செய்யும் நோக்கத்தில் நவீன் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சோனு, விமான பணிப்பெண்ணாக ஆசைப்பட்டதும், தன்னை காதலிக்காத காரணத்தால் விமானப் பெண் வேலையில் அவர் சேருவதை தடுக்கும் வகையில் நவீன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.