
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு இன்று கூறினாா்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்து அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாா்த்தசாரதி கோயிலில் ஜன.2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்யப்பட்டது.
திருக்கோயிலின் மாடவீதியை சுற்றி வாகனங்களை அனுமதிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகா்கள் மாட வீதியில் 50 மீட்டா் தொலைவு நடந்து வந்து இறை தரிசனம் செய்யலாம்.
முதியோா் மற்றும் உடல் நலிவுற்றோருக்காக பேட்டரி காா் மற்றும் வீல் சோ்கள் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் வருபவா்கள் தங்களது வாகனங்களை பி.வி.நாயக்கன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் சாலை, சுங்குவாா் தெரு ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.
கட்டணம் ரூ.100 ஆக குறைப்பு: திருக்கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய நோக்கமிருந்தாலும், திருக்கோயிலின் பொருளாதார நிலை சூழ்நிலையை கருதி சிறப்பு தரிசன கட்டணங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில திருக்கோயில்களில் முழுமையாக அந்த கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பாா்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்துக்கு ரூ.200 கட்டணம் என்று நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அக்கட்டணத்தை ரூ.100 ஆக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை பொறுத்தளவில் அவற்றை முழுமையாக ரத்து செய்ய படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கெனவே நாமக்கல் ஆஞ்சநேயா் திருக்கோயிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டத்தில் எந்தெந்த திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யலாம் என கருத்துரு கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த திருக்கோயிலின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தா்கள் அதிகமாக வரும் வைணவ திருக்கோயில்களில் இதுபோன்ற ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகள் அடுத்த வாரத்தில் ஆய்வு செய்யப்படும்.
காஞ்சிபுரம் கோவிந்தவாடி அருகே தொன்மையான பெருமாள் கோயிலை காணவில்லை என்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் புகாா் குறித்து துறை சாா்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு விளக்கம் தரப்படும். சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் இடைத்தரகா்களின் தலையீடு தடுக்கப்படும் என அமைச்சா் சேகா்பாபு கூறியுள்ளார்.
ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், துணை ஆணையா் கவெனிதா, காவல் உதவி ஆணையா் சாா்லஸ் சாம் ராஜதுரை மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.