பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறுகிறது கோயம்பேடு பஸ் நிலையம். ரவுடி கும்பல் அட்டகாசம் இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
கோயம்பேடு பஸ்நிலையம் ஆசியாவில் மிகப்பெரிய பஸ்நிலையமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மற்றும் சென்னை நகர் மற்றும் புறகர் பகுதிகளுக்கு செல்லும் மாநகர பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
எப்போதும் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும். சமீபகாலமாக கோயம்பேடு பஸ்நிலையத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் ஆண்களிடம் பாலியல் சில்மிஷங்களும் அதிகரித்து உள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் ஆண்களி டம் ஒரு கும்பல் சில்மிஷத்தை அரங்கேற்றி வருகின்றனர். இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர். தனிமையில் நிற்கும் பயணிகள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து அழகான பெண்கள் இருப்பதாக கூறி விபசாரத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.
சபலத்தால் சிலர் செல்லும் போது அங்கு அவர்களை மிரட்டி நகை-பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பலர் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல அசிங்கப்பட்டும், அச்சப் பட்டும் மூடிமறைத்து விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி ரவுடி கும்பல் கோயம்பேடு பஸ்நிலையத்தை தங்களது கூடாரமாக மாற்றத் தொடங்கி உள்ளனர். அவர்களது அட்டகாசம் எல்லை மீறி நடந்துவருகிறது. இதேபோல் கோயம்பேடு பஸ்நிலையத்தில் குடி போதையில் இரவு முழுவதும் தூங்கும் வீடாக போதை ஆசாமிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் அமரும் இருக்கையில் ஹாயாக படுத்து தூங்கும் காட்சி தினந்தோறும் அரங்கேறி வருகிறது. போதை கும்பல் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதும் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. ரவுடிகள் அட்டகாசம் மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாதது கோயம்பேடு பஸ்நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
பஸ்நிலையம் முழுவதும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள், பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் ஆகியவை சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் சரிவர பஸ்நிலையத்துக்கு ரோந்து வருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்குமுன்பு கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுபற்றி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் அங்கு இல்லை என்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா கூறும்போது, பஸ்கள் நிறுத்தப்படும் தடுப்பு சுவர் மற்றும் அங்குள்ள ஓரங்களில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. பெண் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரவுடிகும்பலை கட்டுப்படுத்த போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட சி.எம்.டி.ஏ.வால் போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு பின்னர் பஸ்நிலையத்துக்கு நுழையும் இடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயணிகள் தேவையில்லாமல் பஸ் நிலையத்துகள் நுழைவதைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமற்று காணப்படும் பஸ்நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் பஸ்நிலையம் முழுவதையும் அவ்வப்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடிகள் அட்டகாசம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுத்தம் செய்வதில்லை. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பஸ்நிலையத்தில் இரவு நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பயணிகள் இல்லாமல் தங்கி உள்ளனர். அவர்களுடன் சமூக விரோதிகளும் புகுந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ்நிலையத்தில் தேவையில்லாமல் வருபவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி சோதனை நடத்தி பஸ்நிலையத்தில் வீடு போல் தங்கி இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றனர்.