
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பான அறப்போர் இயக்க மேல்முறையீட்டு மனுவுக்கு பழனிசாமி பதில் அளிக்க சென்னை இன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட தடை நீடிக்கிறது. நெடுஞ்சாலைத்துறை முறைகேடு குறித்து எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தனி நீதிபதி ஏற்கனவே தடை விதித்திருந்தார்.
ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது.
இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்படது. தனி நபர் விமர்சனம் வைக்கவில்லை எனவும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது.
எனவே, எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடை விதிக்கப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த மனு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.