
புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகம் அருகே லாரி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பா.ஜ.க.அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. லாரியில் திடீரென தீப்பிடித்தது எப்படி?மர்ம நபர்கள் யாரேனும் தீவைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.