
சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வந்தால் பிடித்து கொடுக்க போலீஸ் தரப்பில் உத்தரவிட்டுள்ளது. உதவி கமிஷனர்கள் சார்லஸ், துரை ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. பரபரப்பான இந்த சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நாளில்தான் அ.தி.மு.க. அலுவலகத்தில் வரலாறு காணாத மோதல் வெடித்தது.
அதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். உதவி கமிஷனர்கள் சார்லஸ், துரை ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்யப்போவதாக கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாராவது வந்தால் அவர்களை பிடித்து கொடுக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், போலீசாரும் வெளியாட்கள் ஊடுருவி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள். ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.