
யானை குறித்த ஆவணப் பட நாயகர்கள் பொம்மன் பெள்ளிக்கு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, தங்கள் அணியின் உடையான மஞ்சள் நிற ஜெர்ஸியை அளித்து அவர்களை கௌரவப்படுத்தினார். இது குறித்த படம் இணையதளங்களில் வைரலானது
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படம் அண்மையில் ஆஸ்கர் விருது வென்றது. இந்த ஆவணப் படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது.
கிருஷ்ணகிரியில் தாயைப் பிரிந்து தவித்த 3 மாத ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை மூலம் ஒப்படைக்கப் பட்டது. இந்தக் குட்டி யானைகளைப் பொறுப்புடன் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது.
அண்மையில் தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இவர்களை நேரில் சந்தித்து, பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த ஆவணப் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ், இதில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அவர்களுக்கு தோனி அவர்களின் பெயர் பதித்த சிஎஸ்கே மஞ்சள் நிற ஜெர்சியை பரிசளித்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல், அவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கும் புகைப்படமும் வைரலானது.
இந்தப் படத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். இருப்பினும், கிண்டலடித்தும் சில பதிவுகள் வெளியாயின. “அடேய் இந்த மஞ்ச சட்டையை வைச்சு அவங்க என்ன பண்ணுவாங்க. வேறு ஏதாவது உபயோகமாக தரலாமே.” என்று ஒருவர் கேட்க, “இதப் போட்டுக்கிட்டு யானைகிட்ட காமிப்பாங்க, அது காண்டாகும்!” என்று ஒருவர் பதிலளித்திருந்தார். சரி, அந்த யானைகளுக்கு ஒண்ணும் கொடுக்கலியா என்று ஒருவர் நக்கலடித்திருந்தார்.