- குழந்தை தொழிலாளர்கள் பிரச்னையில் ஒப்பந்ததாரரை காப்பாற்ற ஆவின் அதிகாரிகள் முயற்சி
- உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பால் முகவர்கள் சங்கம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்
அம்பத்தூர் ஆவின் பால் உபபொருட்கள் உற்பத்தி பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணி செய்வது ஆதாரபூர்வமான புகைப்படங்களாக, காணொளி பதிவுகளாக ஊடகங்களில் வெளியாகியதோடு, பணி செய்ததற்கான இரண்டு மாத ஊதியத்தை ஒப்பந்ததாரர் வழங்காததால் பாதிக்கப்பட்ட அச்சிறார்கள் பால் பண்ணை நுழைவாயிலில் செவ்வாய்க்கிழமை (06.06.2023) பிற்பகலில் போராட்டம் நடத்திய சூழலில் ஆவின் பால் பண்ணை அதிகாரிகள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமிருந்து பெற்ற ஆதாயத்திற்கு நன்றிக்கடனாக அந்த நபரை காப்பாற்றிடவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு தவறான தகவல் அளித்து பிரச்சினையின் வீரியத்தை குறைக்க முயற்சிகள் நடைபெறுவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் பிரச்சினைகள் வெளி வந்த நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் சிறார்களிடம் காவல்துறையினர் விசாரித்த போதும், செய்தி சேகரித்த செய்தியாளர்களிடமும் ஆவின் பால் பண்ணையில் தங்களை பணி செய்ய அனுமதித்தது யார்..? என்கிற கேள்விக்கு ஆவின் பால் உபபொருட்கள் உற்பத்தி பிரிவு துணைப் பொது மேலாளர் திரு. ராஜசேகர் அவர்களின் பெயரை தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் இரவு ஆய்விற்கு சென்ற போது அதனை கவனத்தில் கொண்டு அம்பத்தூர் பால் பண்ணையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை முறையாக ஆய்வு செய்யாமலும், சம்பந்தப்பட்ட இளம் சிறார்களிடம் நேரடியாக விசாரணை நடத்தாமலும் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கே குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணி செய்யவில்லை என பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பொத்தாம் பொதுவாக கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் இருப்பதால் அமைச்சரின் பதிலை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்கனவே ஆவின் நிர்வாகம் தரப்பில் இருந்து ஒரு தொழிலாளருக்கு தினக்கூலியாக 490ரூபாய் வழங்கப்படுவதை பெற்று, தாங்கள் பணியமர்த்தும் தொழிலாளர்களுக்கு வெறும் 250ரூபாய் ஊதியமாக வழங்குவதாக கூறப்படும் நிலையில் பள்ளிக்கு செல்ல வேண்டிய இளம் சிறார்களை இன்னும் குறைவான ஊதியத்திற்கு பணியமர்த்தி அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகையில் அம்பத்தூர் இணை நிர்வாக இயக்குனர் அலுவலகத்திலுள்ள துணை பொது மேலாளர் (நிதி), நிர்வாகம், அம்பத்தூர் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு பொது மேலாளர், டெண்டர் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தலைமை அலுவலக நிதி (Finance), நிர்வாகம் (Admin), திட்டமிடுதல் (Planning) அதிகாரிகள் வரை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கப்பம் கட்டி வந்ததாக கூறப்படுவதால் அவர்கள் தாங்கள் பெற்ற ஆதாயத்திற்கு நன்றிக்கடனாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை காப்பாற்றிட அமைச்சர் அவர்களுக்கு தவறான தகவல் அளித்ததாக தெரிகிறது.
மேலும் ஆவினில் நடைபெறும் பிரச்சினைகளில் வழக்கம் போல் தற்போதும் பிரச்சினைகளை திசை திருப்பி விட்டு அரசுக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயலை ஆவின் அதிகாரிகள் கனக்கச்சிதமாக செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது ஒவ்வொரு ஆவின் பால் பண்ணைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, பால் பண்ணைகளில் பணி செய்வதற்கான தொழிலாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து நேரடியாக பணியமர்த்த வேண்டும் எனவும், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியதை தடுக்கத் தவறிய அம்பத்தூர் ஆவின் பால் பொருட்கள் பண்ணை துணைப் பொது மேலாளர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது. அத்துடன் குழந்தை தொழிலாளர்களை ஆவின் பால் பண்ணையில் பணியமர்த்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.