ஶ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர் தனது 100 வது வயதில் ( மாசி மாதம் க்ருத்திகை திருநட்சத்திரம்) இன்று திருநாடு அலங்கரித்தார்.
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என இன்றய ஶ்ரீவைணவர்கள் எல்லோரும் கூறும் ஶ்ரீவைணவ தாரக மந்திரத்தை முதன் முதலில் சொன்னவர், ஶ்ரீபெரும்புதூர் ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள்தான்!
இந்த வார்த்தையை ஸ்வாமி ஒரு ஒருமுறை ஶ்ரீவைணவ குழு ஒன்றுக்கு ஒரு பட்டிமன்ற தலைப்பாக தந்தார் அதுவே இன்று ஶ்ரீவைணவர்கள் அனைவரும் உச்சரிக்கும் வைணவ தாரக மந்திரமாயிற்று.
இவர், வைணவத்துக்கு தான் சன்யாச தீட்சை பெறும் முன்பிருந்தே என்னறிய கைங்கர்யங்களை செய்துள்ளார். ஸ்வாமி பூர்வாசிரமத்தில் குமாரவாடி சே. ராமாநுஜ ஆச்சாரியர் என்று அழைக்கப்பட்டார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு தீவிர தேசபக்தியை பரப்பியவர்.
அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இண்டியன் எக்ஸ்பிரஸ், மற்றும் தினமணியில் பணி செய்தவர். தினமணியில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த போது, இவர் இதழ்கள் பிரிவில் பணி செய்துள்ளார். தினமணிக் கதிர், தினமணி சுடர் இவற்றின் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸின் 60ஆம் ஆண்டு விழாவினை சென்னை மயிலாப்பூரில் ஏற்பாடு செய்ததோடு அதில் முதல்வர் காமராஜர், முத்துரங்க முதலியார், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் போன்ற தலைவர்களை அழைத்து விழா நடத்தியவர். அன்றைய காலகட்டத்திலேயே ஈவேராவின் திராவிடக் கழகம் செய்த பிராமண வகுப்பு துவேஷங்களை எதிர்த்த இந்திய தேசபக்தர். எம்.எஸ். சுப்பிரமண்ய ஐயர் தலைமையில் பல கூட்டங்களில் உரையாற்றி போராடியவர்.
தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பாக மாறி நாத்திகம் தலையெடுத்த சமயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடுகளில் பங்குகொண்டவர். இவரும் அக்கால சைவ சமய உபன்யாசகருமான ஶ்ரீகிருபானந்த வாரியாரும் சநாதன(இந்து) தர்மத்தின் சைவ – வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி பாண்டிசேரி அருகே கடலூரில் 1974ல் ஒரே மேடையில் தோன்றி நாங்கள் இரு குழல் துப்பாக்கி எங்களின் இலக்கு ஒன்றே என்று வீர முழக்கமிட்டு நாத்தீகர்களை வியக்க வைத்தனர்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர் இன்றும் கையில் எடுத்து போராடும் வடகலை-தென்கலை காழ்ப்புணர்வுகளை முற்றிலும் நீக்க ஐக்கிய வைஷ்ணவ பிரசாரத்தில் லிப்கோ பதிப்பின் அதிபர் கிருஷ்ணசாமி சர்மா அவர்களுடன் 1974 இல் இணைந்து பாடுபட்டவர். ஸ்ரீபெரும்பூதூரில் 1974 இல் ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீமந் நாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமி நடத்திய ஸ்ரீராமாநுஜ க்ரது விழாவில் பங்குகொண்டு ஸ்வாமி தாம் எழுதிய பகவத் ராமானுஜர் என்ற நூலை வெளியிட்டு காஞ்சி மஹா வித்வானின் முன்னுரை பெற்று பாராட்டையும் பெற்றவர்.
இந்த ஸ்வாமி சுமார் முப்பத்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக திருமால் என்ற ஆன்மீக இதழை எவ்வித தொய்வும் இன்றி நடத்தி ஸ்ரீவைஷ்ணவ கொள்கைகளை மக்களிடம் பரப்பிவந்தார். ஶ்ரீவைணவப் பேரவை சார்பில் பாஷ்யம் செட்டியாரோடு சேர்ந்து ராமானுஜர் இயக்கத்தில் பங்கு கொண்டு சுமார் 630 கிராமங்களுக்கும் மேல் சென்று சொற்பொழிவு செய்து ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பியவர்.
இவருக்கு திருநாவீறுடைய பிரான் என்று காஞ்சி ஸ்வாமியும், ஸார க்ராஹி என்று காரப்பங்காடு ஸ்வாமியும் பாராட்டி கௌரவித்து விருது அளித்துள்ளனர். பாரதி கலைக்கழகம் ஸ்வாமிக்கு செந்தமிழ் வேதியர் என்கிற விருதை அளித்துச் சிறப்பு செய்தது.
ஶ்ரீவைணவ மாமணி என்ற விருதை ஸ்வாமிக்கு கடுக்கலூர் திருமால் அடியார் அருள்நெறி மன்றம் வழங்கியுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக ஸ்ரீவைஷ்ணவ ஸிம்ஹம் ஶ்ரீஸுதர்சனர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியின் வைணவப்பணி சிறக்க வாழ்த்தி பெரிய மடலை எழுதியுள்ளார். ஶ்ரீவைஷ்ணவ ஸிம்ஹம் ஶ்ரீஸுதர்சனர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியுடன் சேர்ந்து ஐக்கிய வைஷ்ணவ பிரசாரம் மூலம் தென்கலை வடகலை ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டார்.
சென்னைக் கம்பர் கழகம் ஸ்வாமிக்கு மர்ரே ராஜம் நினைவுப் பரிசை 1995 இல் வழங்கியுள்ளது. தமிழக ஸ்ரீ வைஷ்ணவப் பேரவை ஸ்வாமிக்கை திருவாய்மொழி சிந்தனைச் செல்வர் என்ற விருதை இவருக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. திருமால் அடியார் குழாம் என்ற அமைப்பை தொடங்கி அதைக் கொண்டாடும் விதமாக 15 விதமான வைணவத தலைப்புகளை ஏற்படுத்தி பல பெரியோர்களை சொற்பொழிவாற்ற செய்த போது அதில் ஒரு தலைப்பாக தான் இன்று ஸ்ரீ வைஷ்ணவ உலகம் போற்றும் உய்யஒரேவழி உடையவர்திருவடி என்னும் தாரக மந்திரம்.
இவரது சிந்தனையில் உதித்த ஶ்ரீவைணவ பட்டிமன்ற தலைப்பானது இன்று ஒவ்வொரு ஶ்ரீவைணவர்களும் தினமும் உச்சரிக்கும் ஒரு தாரக மந்திரம் என்றால் அது மிகையே இல்லை. திரைத்துறையில் கூட ஸ்வாமியின் பங்குண்டு. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜி.வி. ஐயருடன் சேர்ந்து அப்போது பிரிசித்தி பெற்ற இராமானுஜர் என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுத உதவியதோடு ஸ்வாமி அந்த இராமானுஜர் திரைபடத்தில் திருக்கோட்டியூர் நம்பியாகவும் நடித்துள்ளார்.