— மந்திரமூர்த்தி அழகு —
தேஜஸ் பவுண்டேஷன் அமைப்பு சென்னையில் சிறப்பான இலக்கிய நிகழ்வுகளைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
நேற்று ஜூன் மாதம் 30 – ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தேஜஸ் பவுண்டேஷன் சார்பாக மயிலையில் இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் திரு.கே.ஜி ரகுநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
விருந்தினர்களைத் தேஜஸ் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் திரு. பி.டி.டி ராஜன் அவர்கள் கௌரவித்தார்.
தலைமையேற்ற டாக்டர் பாஸ்கரன் அவர்களை எழுத்தாளர், சமூக சேவகர் என்பதுடன் தன்னடக்கத்தின் வடிவம் என்றும் சொல்லலாம். ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற குறளுக்குப் பொருத்தமானவர் அவர். டாக்டர் பாஸ்கரன் குருவின் பெருமைகளைக் குறித்துச் சிறப்பாகச் சுமார் 30 நிமிடங்கள் வைணவத்தின் வழியில் நின்று உரையாற்றினார்.
கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘குரு அருளும், திருக்குறளும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். கீழாம்பூரார் திருக்குறளில் ஆழங்கால் பட்டவர். இரண்டு தடவைகள் திருக்குறளைக் குறித்து ஏழு மணி நேரம் (ஒவ்வொரு முறையும்) சொற்பொழிவு ஆற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. அவரது உரையில் இருந்து சில முக்கியக் குறிப்புகள்.
1. திருக்குறளைக் காப்பாற்றிக் கொடுத்த பெருமை மூன்று சைவ ஆதினங்களுக்கு உண்டு.
1.திருப்பனந்தாள் காசி மடம்.
2.மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமை ஆதீனம்.
3. திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்.
2. குரு ஸ்தானத்தில் இருப்பவர் வணங்கத் தக்கவராக மட்டுமல்ல. நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாகக் கிருஷ்ணனைச் சொல்லலாம். குந்தியின் சகோதரனின் மகனான கிருஷ்ணன் பஞ்சபாண்டவர்களுக்குக் குரு ஸ்தானத்தில் இருந்ததுடன் நல்ல நண்பனாகவும் இருந்தான்.
3.நான் யார்? என்பது அனைவரும் அறிந்த மெய்ஞ்ஞானக் கேள்வி. நீ யார்? என்ற ஞானக் கேள்வியானது யாரால் யாரை நோக்கி கேட்கப்பட்டது? என்பதற்கான விடைகளையும் கீழாம்பூரார் சிறப்பாக விளக்கினார்.
4. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் என்ற திருக்குறளையும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற திருக்குறளையும் அவர் விளக்கினார். அத்துடன் அவற்றின் ஆழத்தையும் தொட்டுச் சென்றார்.
5. சமய நல்லிணக்கம் அவசியம் தான். அதே சமயத்தில் திருக்குறளானது சைவம், வைணவத்தின் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த நூல் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
6. திருவள்ளுவருக்குத் தெய்வப்புலவர் என்ற பட்டப் பெயருடன் ஞானவெட்டியான் என்ற பெயரும் உண்டு என்பதையும் கீழாம்பூரார் சுட்டினார்.
7. திருவள்ளுவரின் தனிச்சிறப்பாக அவருக்குத் தனியாகக் கோவில் இருப்பதைக் கூறலாம். சென்னை மயிலாப்பூரில் இது இருக்கிறது.
8. தமிழ்நாட்டில் முதன் முதலாகத் திருக்குறள் நூலை வகுப்பின் மூலமாகக் கற்பித்தவர்கள் இருவர். முதலாமவர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். இரண்டாமவர் சென்னை சிந்தாதிரிப் பேட்டைத் தமிழறிஞர் திரு.வடிவேலு செட்டியார்.
9. அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதல் திருக்குறளில் ஆதி, பகவன் ஆகிய இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். பிற மொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதில் அவருக்கு ஒவ்வாமை இல்லை என்பதும் இதனால் தெரிகிறது.
10. தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மானூரில் கண்டு எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் தான் மிகவும் பழமையானது. உத்திரமேரூர் கல்வெட்டுகளுக்கு எல்லாம் முந்தையது . அமைச்சு, அதன் நலம் குறித்தெல்லாம் அந்தக் கல்வெட்டுகள் பேசுகின்றன.
***
ஆகக் குருவைக் குறித்தும், திருக்குறளைக் குறித்தும் பல்வேறு தகவல்களை ஆராய்ச்சி நோக்குடனும், கருத்தாழத்துடனும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அருமையான முறையில் உரை ஆற்றினார்.
நிகழ்வைச் சிறப்பான முறையில் திரு.ஜெயராமன் மணியன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வைச் சிறப்பான முறையில் தேஜஸ் பவுண்டேஷன் அறங்காவலர் திரு பி.டி.டி ராஜன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இனிய நண்பர் என்று சொல்லவா! இல்லை, எனக்குக் குரு கவிஞர் இசைக்கவி ரமணன், ஜே.பி ஃபவுண்டேஷன் ஜே.பாலசுப்ரமணியன், எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர், நண்பர்கள் உரத்த சிந்தனை உதயம்ராம், சங்கர நேத்ராலயா இருங்கோவேள், உமா பாரதி, கலாவதி பாஸ்கரன் உள்ளிட்டோர் பலரையும் நிகழ்வில் சந்திக்க முடிந்தது.
தமிழ் அமிழ்தம் பருகிய இனிய மாலைப் பொழுது!