சென்னை
நாங்கள் நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம் என்று பேசினார் திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
மதிமுக., தலைமை மீது அதிருப்தி அடைந்ததாகக் கூறி, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி திமுக.,வில் இணைந்துள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக.,வைச் சேர்ந்த 160 தொண்டர்கள் உள்பட அதிமுக., தேமுதிக., பாமக., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமாகா., உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுக.,வில் இணைத்துக்கொண்டனர்.
அந்த இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியபோது…
திமுக., தொண்டர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும், அதுவும் தலைவர் கருணாநிதி தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அண்மையில் தொடர்ந்து சில நாட்களாக பத்திரிகைகளில், மதிமுக.,வில் இருந்து தாய் கழகமான திமுக.,வுக்கு வந்து சேர்கிறார்கள் என செய்திகள் வந்துள்ளன.
நாங்கள் அந்தக் கட்சியை உடைக்கும் முயற்சியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். நாங்கள் உடைக்க வேண்டும் என்று நினைத்தால் எப்போதோ உடைத்திருப்போம். ஆனால், அவர்கள் தானாக விரும்பி நிம்மதியை தேடி இங்கு வருகிறார்கள். இன்று, நீங்கள் மட்டும் அன்றி நாங்களும் முழு நிம்மதியை பெற்றுள்ளோம்.
இன்று திமுக., ஆட்சியிலோ, எதிர்க் கட்சியாகவோ இல்லாத நிலையிலும், கருணாநிதியை நம்பி பிற கட்சிகளைச் சேர்ந்த நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள். ஏப்ரல் மாதம் 2016 சட்டமன்ற தேர்தலில் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும். – என்றார்.