சென்னை:
சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால், 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் அஜய் விடுமுறை தினமான ஞாயிறு நேற்று தனது தாய் தந்தையருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது அறுந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மாஞ்சா நூல் சிறுவன் அஜயின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாஞ்சா நூலை பயன்படுத்தியவர்களை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நகரில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும், இந்தத் தடை முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை.