தமிழகத்தைக் காத்திட இந்து முன்னணி ஜூலை 15ல் சென்னையில் மாநாடு; அழைக்கிறார் ராம.கோபாலன்!

 


ஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி தமிழகப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்துகிறது! இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்துமுன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன், மாநாட்டுக்கு ஆன்மிக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்பட்டு வரும் சூழலில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தைப் பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோதப் போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை என எப்போதும் எதிர்ப்பு, எதற்கும் எதிர்ப்பு என போய்க் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது. தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத் தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணை போயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்த பின்தான் நடந்திருக்கிறது.

தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்தப் படுவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது.

கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.
மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவினைவாதிகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசை திருப்பி வருகிறது. இப்படிப்பட்ட அபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.

இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.

தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது. தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம். நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம். – என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.