காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு!

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இரட்டை திருமாளிகையில் உள்ள சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ளது ஏகாம்பரநாதர் திருக்கோவில். இது, நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில். இக்கோயிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள இரட்டை திருமாளிகையை புதுப்பிக்க, கடந்த 2012 -ஆம் ஆண்டு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கல் தூண்கள் மாற்றப் பட்டிருந்தன. நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த சிவன், பார்வதி, விநாயகர், முருகன் கற்சிலைகள் மாயமான நிலையில், சில தூண்களுமே காணாமல் போயின. இவை கடத்தப்பட்டதாக டில்லிபாபு என்பவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். ஆனால் அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாததால், டில்லிபாபு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மீனாட்சி, கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.