மயிலாப்பூரில் சிலைமாற்றம்: டிவிஎஸ்., வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரம் தடை

சென்னை: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மயில் சிலை மாற்றம் செய்யப்பட்ட வழக்கில், எஃப்ஐஆர் பதிவான நிலையில், கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பு வகித்த டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் கைதாவதில் இருந்து 6 வாரங்களுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற  கபாலீஸ்வரர் கோவிலில் மிகவும் பழைமையான மயில் சிலை ஒன்று இருந்தது. மயிலாப்பூர் கோயில் தல புராணத்தின் படி, இங்கே பார்வதி தேவியே மயில் உருவாக வந்து சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம்.  இதனை நினைவூட்டும் அகையில், வாயில் குவளை மலரைக் கவ்வியபடி சிவலிங்கத்துக்கு மயில் ஒன்று பூஜை செய்வது போல உள்ள கல்லால் ஆன மயில் சிலை ஒன்று மூலவரின் அருகே அமைக்கப் பட்டிருந்தது. இது ஆயிரம் ஆண்டு பழைமையானது என்று கூறப்படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்ற போது,  அந்தப் பழைமையான மயில் சிலையை அகற்றிவிட்டு புதிதாக ஒரு மயில் சிலை உள்ளே வைக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட மயில் சிலையின் வாயில் மலருக்கு பதிலாக பாம்பை வாயில் கவ்விக் கொண்டிருப்பது போல அமைக்கப் பட்டிருந்தது. எனவே இந்த சிலை மாற்றம் செய்யப்பட்ட சிலை என்றும், பழைமையான சிலை எங்கோ கடத்தப் பட்டுள்ளது என்றும் பக்தர்கள் சந்தேகம் கொண்டனர்.

இது தொடர்பாக  இந்து சமய அறநிலையத் துறை புகார் எதுவும் அளிக்காமல் மறைத்து வந்தது. இந் நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது அண்மையில் ஒரு வழக்கினைப் பதிவு செய்தனர்.

இதனிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் திடீரென பிரச்னை வெடித்தது. அரங்கநாதரின் மூலவர் சிலையே களவாடப் பட்டு கடத்தப்பட்டுள்ளது என்று புகார் கூறப்பட்டது. அண்மையில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நடந்த கோவில் புனரமைப்புப் பணிகளின் போது,  கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து புகார் அளித்தால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ  போலீஸாரோ நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீரங்கம் கோவில் சிலைக் கடத்தல் குறித்து விசாரித்து 6 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைக் கடத்தல் ஐஜி பொன்மாணிக்க வேல் தனது விசாரணையை இன்று தொடங்க இருந்தார். இந்த நிலையில், மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நேற்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆறு வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் எனவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் போலீசார் உத்தரவாதம் அளித்தனர்.

இதை அடுத்து வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். மனு தொடர்பாக பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 6 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

முன்னதாக, மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை காணாமல் போனதாகக் கூறப்பட்ட வழக்கில் அப்போதைய கோயில் இணை ஆணையராக இருந்த திருமகள், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு நடைபெறும் நிலையில் திருமகளைக் கைது செய்ய திட்டமில்லை என்று போலீஸார் பதிலளித்தனர். இதை அடுத்து, ”இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகளை ஆறு வாரங்களுக்குக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

திருமகள், காஞ்சிபுரம் உற்சவர் வழக்கு மட்டும் அல்லாது இன்னும் பிற வழக்குகளிலும் சிக்கியுள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை காணாமல்போனது உள்ளிட்ட விவகாரங்களில் இவர் பெயர் அடிபடுவதால், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் திருமகளைக் கைது செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில் அறநிலையத் துறையின் திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.