விசாரணையில் தவறு இருக்கிறது..! வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக மாஃபா பாண்டியராஜன்!

சென்னை: சிலைக் கடத்தல் குறித்து விசாரித்து வரும் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில், தான் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றுள்ள டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மிகவும் பழைமையான கல்லாலான மயில் சிலை ஒன்று மாற்றப்பட்டுள்ளதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில், அப்போது கோயில் இணை ஆணையராக இருந்த திருமகள், அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த வேணு சீனிவாசன் ஆகியோரையும் இந்த வழக்கில் பதிவு செய்தனர் போலீஸார்.

இந்நிலையில் நேற்று இரவு டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே காஞ்சிபுரம் கோயில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திருமகளும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் வேணு சீனிவாசன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்து அதே போல், 6 வார கால இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குக்குத் தேவையான விசாரணைகளை மட்டும் நேரில் சந்தித்து நடத்தலாம், கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

இதனிடையே, வேணு சீனாவானுக்கு ஆதரவாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குரல் கொடுத்துள்ளார். அதில் சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் மிகவும் நல்லவர். விசாரணையில் எதோ தவறு இருக்கிறது. என்னால் இதை நம்ப இயலவில்லை என்று கூறியுள்ளார். #mafoikprajan