சென்னை: ஸ்டாலினுக்கு பண்பும் இல்லை, பக்குவமும் இல்லை, அவர் கற்க வேண்டியது அதிகம் உள்ளது என்று விமர்சித்துள்ளார் தமிழக பாஜக., மூத்த தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.
முன்னதாக, திமுக.,வுடன் நெருக்கமானவர் என்று கருதப் படும் இல.கணேசன், திமுக.,வின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் இதனை வெளிப்படுத்தியிருந்தார். அதில், தி.மு.கழகத்தின் தலைவராக திரு ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! கலைஞரின் வாரிசு என்பது உண்மை. அது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே! எனக்குத் தெரிந்து 1975-77 அவசரநிலைக் காலத்திலும் அதற்கு முன்பும் அரசியல் பணியாற்றியவர்; சிறை சென்றவர்; சித்ரவதைக்கு உள்ளானவர்; கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர் என்ற தகுதிகளின் அடிப்படையில் இன்று கலைஞர் அமர்ந்த நாற்காலியில் அமர இருக்கிறார். வாழ்த்துக்கள்! – என்று தெரிவித்திருந்தார்.
இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசியல் கட்சி அமைப்பல்ல என்பதாலும், பல்வேறு கட்சிகளில் இருப்பவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாலும், அந்த அமைப்பின் மரபுப் படி, அவர் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் இல.கணேசன் தற்போது பாஜக., தலைவர். அந்த வகையில் அவரது கருத்துக்கு பதில் கொடுத்த பலரும், கருணாநிதியின் வாரிசு என்ற ஒரே தகுதிதான் அவருக்கு உண்டு என்று கூறி, இல.கணேசனின் கருத்தை விமர்சித்தனர்.
கலைஞரின் வாரிசாக அவர் இல்லையேல் வைகோ கதிதான் அவருக்கும், கலைஞரின் வாரிசு என்பது கூடுதல் தகுதி அல்ல, அதுவே தகுதி. எப்படி நேரு- இந்திரா – ராஜீவ் – ராகூல், முலாயம்- அகிலேஷ், அது போல கலைஞர்- ஸ்டாலின்- உதயநிதி என்று கருத்து தெரிவித்தனர். மேலும், இல.கணேசனின் கருத்துக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்தனர். அதற்கு ஏற்ப, தலைவராகப் பதவி ஏற்ற உடனேயே, மோடி குறித்த விமர்சனத்தை முன் வைத்தார் மு.க.ஸ்டாலின். காவி அடிக்க நினைக்கும் அவருக்கு எதிராக திரண்டு எழுங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஏற்கெனவே, தமிழகம் வந்த மோடிக்கு கறுப்புகொடி, பலூன்கள் காட்டியும், ஆளுநர் ஆய்வுகளுக்கு கறுப்புக் கொடி காட்டியும் அநாகரிக அரசியலை மேற்கொண்டிருக்கும் திமுக., தலைவர் ஸ்டாலின் குறித்து பாஜக.,வினர் பலரும் தங்கள் அதிருப்தியையும் விமர்சனத்தையும் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இல.கணேசனும் இன்று ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், பதவி ஏற்கும் ஒருவருக்கு பண்பு கருதி வாழ்த்தினேன். பதவி ஏற்றவர் உரையில் பண்பு இல்லை, பக்குவம் இல்லை, பாரம்பரிய மரபும் இல்லை. பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது… என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் பாடம் கற்க வேண்டியுள்ளது என்றால், அவராகவே அனுபவத்தின் அடிப்படையில் கற்க வேண்டியது எனலாம். ஆனால், கற்பிக்க வேண்டியுள்ளது என்று இல.கணேசன் கூறுவதால், இப்போது அது என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் பலர்.
பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பதிவில், ஸ்டாலினுக்கு எதிராக காவிப்படை தயாராகவே உள்ளது என்று பதிலடி கொடுத்திருந்தார். அத்தகைய ஆணித்தரமான வீச்சைத்தான் தமிழகத் தலைமையிடம் பாஜக.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழக பாஜக., தலைவராக இருக்கும் தமிழிசையோ, திமுக.,வுக்கு ஆதரவாகவே பேசிவருவதால், கட்சித் தொண்டர்களிடம் இருக்கும் சோர்வைப் போக்க, இல.கணேசன் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதாகவே பேசப்படுகிறது.