மழைநீரை அகற்றக் கோரி காஞ்சிபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

காஞ்சீபுரம்: 

காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள இந்திரா நகர், அண்ணாமலை நகர், செந்தமிழ் நகர், தேவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் உள்ளது. அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கனமழையால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாகின. அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதால் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.
தேங்கிக் கிடக்கும் நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மழைநீரை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சென்றனர். ஒரு மணிநேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.