புழல் சிறையில் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை: வெளியான படங்களால் அதிர்ச்சி!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல் படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்துவது  புகைப்படங்களின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல்  படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்தி  வருவது, புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவது குறித்து வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட ஹோம் தியேட்டர், பாலியல் படம் பார்க்க டிவி, செல்பி எடுக்க ஸ்மார்ட் போன்கள் என சொகுசு வாழ்க்கை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், ஷட்டில் விளையாட உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க பிளாஸ்க், தினமும் கறி, மீன், முட்டை என ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என சகல வசதிகளுடனும் சிறையில் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தாருடன் வீடியோ காலிங், கூட்டாளிகளுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுக்க ரகசிய மொபைல் போன்களுடன் வாழ்க்கை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதனால் சிறையில் காவலர் துவங்கி உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் கொடுத்து புழல் சிறையை சொகுசு விடுதி போல பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே, இன்று காலை புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார் சிறைத்துறை டிஐஜி. பின்னர், முதல் வகுப்பில் உள்ள கைதிகளுக்கான சொகுசு வசதிகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி தெரிவித்துள்ளார்.

சிறையில் கைதிகளுக்கு செல்ஃபோன்களை யார் கொடுத்தது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது என்று டிஐஜி முருகேசன் கூறினார்.

புழல் சிறையின் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைத்துறை டிஐஜி முருகேசன் நடத்திய ஆய்வில் 2 எஃப்எம் ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

18 டிவி, எப் எம் ரேடியோ இரண்டு என இந்தப் பொருள்கள் மறைத்துக் கொண்டு போகும் அளவுக்கு சிறிய பொருளா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்.