துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!

சென்னை: துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று கல்வியாளர்கள் தம்மிடம் தெரிவித்த கருத்தையே ஆளுநர் கூறியதாக, ஆளுநர் மாளிகை விளக்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்தது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியபோது, என்னைச் சந்தித்த கல்வியாளர்கள் மற்றும் சிலர் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு துணைவேந்தர் நியமனம் நடப்பதாக கவலை தெரிவித்தனர். இதனை என்னால் நம்ப முடியவில்லை. அதனை மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். அப்போது தொடங்கி 9 துணைவேந்தர்கள் தகுதி அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றே பேசினார். மேலும், ஊழல் அல்லது பணம் வாங்கியதாக எவர் மீதும் ஆளுநர் புகார் கூறவில்லை! கல்வியாளர்கள் அவரிடம் தெரிவித்த கருத்தை மட்டுமே ஆளுநர் தெரிவித்தார் என்பது அவரது பேச்சில் தெளிவாக உள்ளது.

2018க்கு முன்னர் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களுக்கு ஏற்பட்ட நிலையை மக்கள் பார்த்துள்ளனர். அது…

1. துணைவேந்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

2. இரண்டு துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச ஒழப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் சோதனை மேற்கொண்டனர்.

3. நியமன முறைகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஒரு துணைவேந்தரை சென்னை உயர் நீதிமன்றமே பதவி நீக்கம் செய்தது.

எனவே, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றி துணைவேந்தர்களை நியமிக்கும் வகையில், விதிகளை ஆளுநர் மாற்றியமைத்தார்.  2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!