‘அம்மா’ பக்தி… அம்மன் பக்தியான விநோதம்…! அதிமுக.,வின் லேட்டஸ்ட் அரசியல்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில், மேல்மலையனூர் அங்காளம்மன் பாட்டு பாடி திடீரென பக்திப் பரவசத்தில் பெண்கள் துள்ளிக் குதித்து சாமி ஆடி புதுவித டிரெண்டை உருவாக்கியுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாரத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், விழுப்புரம் செல்வராஜ் என்ற பேச்சாளர் திடீரென மலையனூரு அங்காளியே என்ற பாடலைப் பாடினார். இதைக் கேட்டு அங்கிருந்த பெண்களில் சிலர் சாமி ஆடி பக்தியை வெளிப்படுத்தினர்.

அந்தப் பாடல் பாடி முடியும் வரையில் பக்திப் பரவசத்தில் பெண்கள் மூழ்கியிருந்ததால், எம்.எல்.ஏ கொடுத்த இலவசப் பொருட்களை ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று ஆர்ப்பாட்டம் ஆரவாரம் கூச்சல் பரபரப்பு எதுவுமின்றி அமைதியாகச் சென்று, பொருட்களைப் பெற்றனர்.

இந்த டிரெண்ட் பிடித்துப் போனதோ என்னவோ, அல்லது இதே போல் திருவண்ணாமலை மாவட்ட பெண்களை அம்மா பேரைச் சொல்லி அமைதியாக்கி  வைப்பதை விட அம்மன் பாட்டுப் பாடி அமைதியாக்கலாம் என நினைத்தனரோ என்னவோ… புது வித டெக்னிக்கை படித்துக் கொண்டார்கள் அதிமுக.,வினர்.

நேற்று அ.தி.மு.க. 47வது ஆண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அரசின் சாதனைகளைப் பற்றி பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் பேசியபோது, அதைக்கேட்டு பெண்கள் கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென என்ன நினைத்தாரோ மேல்மலையனூர் அங்காளம்மன் பக்திப் பாடலை அவர் பாடினார். இதைக் கேட்ட மறுவினாடியே கூட்டத்தில் இருந்த சுமார் 10 பெண்கள் பக்திப் பரவசத்துடன் சாமியாடினர். அ.தி.மு.க. தொடக்கவிழா பொதுக்கூட்டம் , கடைசியில் பக்திக் கூட்டமாக மாறி அமைதியாக நடைபெற்றது!