சென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம்! அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்!

6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில், கொளத்தூர் மூகாம்பிகை சிக்னல், மூலக்கடை மேம்பாலம் அருகில், திருவொற்றியூர் சுனாமி குடியிருப்ப ஆகிய 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அயோத்தியாவில் கோயில் கட்ட உள்ள இடர்பாடுகள் நீங்க பிரார்த்தனை செய்து 108 தேங்காய் உடைக்கப்பட்டது. போரூர், ராயபுரம், டவுட்டன், மணலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தக் காவிக் கொடி ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில செயலாளர் த.மனோகர், மாநகர தலைவர்ஏ.டி. இளங்கோவன், மாநகரத் துணைத் தலைவர் எஸ்.எஸ். முருகேசன், மாநகர செயலாளர் கள் மாதவரம் செல்வகுமார், சிவ. விஜயன், மாநகர செய்தித் தொடர்பாளர் பசுத்தாய் கணேசன், மாநகர செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் மாவட்ட, தொகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தபோது, டிசம்பர் 6, அயோத்தியில் அவமானச் சின்னம் அகற்றப்பட்ட நாள். ராமஜென்ம பூமி வழக்கு 70 ஆண்டுகளுக்கு மேல் நடந்து, அலகாபாத் நீதீமன்றத்தால் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அது கடந்த 15 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் மேல் விசாரணையில் கிடப்பில் இருக்கிறது. இந்துக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். அயோத்தியில் இராமர் ஆலயம் அமைக்க மத்திய அரசு சட்டம் இயற்றி, அதில் உள்ள இடர்பாடுகளை நீக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல், மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுத்து, அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பிட ஆவன செய்ய வேண்டும்! அதற்காகவே இந்தக் காவிக்கொடி ஆர்ப்பாட்டம்… என்றனர்.

சென்னையைப் போன்று, தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் காவிக்கொடி ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தியது.