குட்கா மேட்டர்… அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சி.பி.ஐ.,யில் ஆஜர்

குட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் குட்கா, பான் பொருள்கள் தடை செய்யப்பட்டன. இருப்பினும், பரவலாக இந்த போதைப் பாக்கு, போதைப் பொருள்கள் பரவலாக நடமாடின. இதை அடுத்து நடத்தப் பட்ட சோதனையில் சென்னை மாதவரத்தில் ஒரு குடோனில் இருந்து பான் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் உரிமையாளர் மாதவராவ் கைது செய்யப் பட்டார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, கலால்வரித் துறை, காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்ப மாதவராவ் வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தில்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகரக் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், அவரின் தொழில் கூட்டாளிகள், கலால்வரித் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் 6 பேர் கைது செய்யப் பட்டனர்.

இந்நிலையில், லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பப் பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜரானார்.

அவரிடம், மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.