காஞ்சி- விக்ரஹம் செய்வதில் தங்கம் மோசடி! கைதான முன்னாள் குருக்களுக்கு ஜாமீன்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் விக்ரகம் செய்வதில் தங்கம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறி கைதானவர்களில் ஒருவரான ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

rajappa gurukkal

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் விக்ரகம் செய்வதில் தங்கம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறி கைதானவர்களில் ஒருவரான ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி தெய்வ விக்ரகங்கள் சேதம் அடைந்ததாகக் கூறி, புதிய ஐம்பொன் விக்ரகங்கள் செய்வதற்கு 2.82 கோடி ரூபாய் மதிப்பில் 8.7 கிலோ தங்கம் நன்கொடையாக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டது!

இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் புதிய சிலைகள் செய்வதில் மோசடி நடந்ததாகக் கூறி அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி, அர்ச்சகர் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்!

இந்த வழக்கில் வீரசண்முகமணி, கவிதா, முத்தையா ஸ்தபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் உள்ளனர்! இந்நிலையில் இந்த மோசடி குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், முன்னறிவிப்பு இன்றி கோயில் குடமுழுக்கு ஒன்று தொடர்பாக கனடா நாட்டுக்குச் சென்றார் முன்னாள் அர்ச்சகர் ராஜப்பா.

இதை அடுத்து, ராஜப்பா இந்தியாவுக்கு வரும்பொழுது தங்களுக்கு தகவல் அளிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி கனடாவில் இருந்து மும்பைக்குத் திரும்பி வந்தார் ராஜப்பா. அப்போது, அவரது அடையாளத்தை பரிசோதித்த மும்பை விமான நிலைய அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜப்பா கைது செய்யப்பட்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். தொடர்ந்து அவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக தாம் அவதிப்படுவதாகக் கூறி தனக்கு ஜாமீன் வழங்குமாறு கும்பகோணம் நீதிமன்றத்தில் ராஜப்பா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜப்பாக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்ததை அடுத்து  ராஜப்பாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.