மின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர் உயிரிழப்பு!

பிரசன்னா, மற்றும் குடும்பத்தினரின் மறைவு குறித்து ஊடகத்தினர் மற்றும் ஊடக சங்கங்கள் வருத்தமும் ஆழந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

prasanna newsj

சென்னை நியூஸ் ஜெ டிவி.,யில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா, அவரது மனைவி ரேவதி, மாமியார் அா்ச்சனா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

சென்னை தாம்பரம், சேலையூர் பகுதியில் நள்ளிரவில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னா. இவர், நியூஸ் ஜே டிவியில் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.

‘நியூஸ் ஜெ’ வின் சென்னை செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா, தேசிய ஊடகவியலாளர்கள் நலச் சங்கத்தில் பொருளாளராகவும் இருந்தார். தேசிய சிந்தனை கொண்டவராக அறியப் பட்ட பிரசன்னா, பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாளராகப் பணியாற்றியவர்.

prasanna newsj2இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அதே வீட்டில் அவரது மனைவி அா்ச்சனா, அவரது தாயார் ரேவதி ஆகியோரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாம். தொடர்ந்து மின்கசிவு காரணமாக, வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் சூடாகி திடீரென வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் தீப்பற்றி உருகியுள்ளன. மின்சாரமும் தடைப்பட்டதால், இருட்டில் எதுவும் தெரியாமல் மூவரும் தடுமாறியுள்ளனர்.

வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், வீட்டின் அறை உள்ளிருந்து வெளியே வர இயலாமல் புகை மண்டலத்தில் மூவரும் தவித்துள்ளனர். பிரசன்னா அவரது அறையில் இருந்து வெளியே வர முயற்சி செய்து அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மனைவி அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார். புகை மண்டலத்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வீடு சாலையில் இருந்து உள்ளே தள்ளி இருந்ததால் தீ விபத்து நடைபெற்றது குறித்து அருகில் இருப்போர் எவருக்கும் தெரியவரவில்லையாம். இன்று அதிகாலை அந்த வழியாகச் சென்றவர்களும் வீட்டுக்கு வேலை செய்ய வந்த பெண்ணும் அந்த வீட்டில் இருந்து புகை வெளியேறியது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண் ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே, தீயணைப்புத் துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து வீட்டில் இருந்தவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு முன் மூவருமே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசன்னா, மற்றும் குடும்பத்தினரின் மறைவு குறித்து ஊடகத்தினர் மற்றும் ஊடக சங்கங்கள் வருத்தமும் ஆழந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.