கோவையில் மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய தாளாளர் மதபோதகரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
கோவை காந்திபுரம் பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கே 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ராமநாதபுரம் புளியங்குளத்தை சேர்ந்த மரிய அண்டனி தாஸ் (55 வயது) இவர் தாளாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் 5 மாணவியரை அழைத்த தாளாளர் தன் மொபைல்போனில் சில ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொடுக்குமாறு தெரிவித்தார்.
அவரது மொபைல் போனை மாணவியர் வாங்கிப் பார்த்தபோது அதில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.
அதிர்ச்சி அடைந்த மாணவியர் வீட்டுக்கு சென்று தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளி முன் திரண்டனர். தாளாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் ரத்தினபுரி போலீசார் வந்து மரிய அண்டனி தாஸை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் மாணவியருக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காட்டும் நோக்கில் தாளாளர் செயல்பட்டது உறுதியானது .
அவர்மீது ஒரு மாணவியின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாளாளர் மீது போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மரிய அண்டனி தாஸ் மதபோதகராக இருந்து வந்துள்ளார்.
இவர் இதற்கு முன் வேறு ஏதேனும் மாணவியிடம் இதுபோன்று நடந்து உள்ளாரா என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் இதுகுறித்து கூறுகையில் … அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் நிர்வாகத்தில் நேரடியாக தலையிட முடியாது. மேலும் அவர் பள்ளிக்கல்வித் துறையில் ஊதியம் பெறக்கூடிய நபரும் அல்ல. உடனடியாக வேறு தாளாளர் மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது… என்று கூறினார்