
குட்கா, போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும். குட்கா மற்றும் போதை பாக்கு விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி, போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போதை பொருள் விற்பவர்களை கண்டறிய 150 ரகசிய போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை ரகசியமாக கண்காணித்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் குட்கா மற்றும் போதை பாக்கு விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள் இதுவரை 87 கடைகளுக்கு சீல் வைத்து உள்ளனர். இதைத்தவிர மாநகர் பகுதியில் 35 பேரின் வங்கி கணக்குகளும், புறநகர் பகுதிகளில் 39 பேரின் வங்கி கணக்குகளும் வங்கி நிர்வாக ஒத்துழைப்புடன் முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
குட்கா, போதை பொருட்கள் கைமாறுதலுக்கான பணம், விற்பனை செய்ததில் கிடைத்த பணம் உள்ளிட்ட பரிமாற்றங்கள் இந்த கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்கு இந்த கணக்குகள் பயன்படுத்தப்பட்டதால் வங்கி கணக்குகள் முடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து போலீசார் கூறுகையில், குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும். வருமானம் வருகிறது என்பதற்காக பெட்டிக்கடைகளில் சிலர் விற்பனை செய்கின்றனர். கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே சிறிய தொகைக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கைைய இழந்து விட வேண்டாம் என்றனர்.
