கோவையில் 6 கோடி மதிப்பிலான 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி( 60). நகை மொத்த வியாபாரி. இவர் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு அவரது கடையில் இருந்து மொத்த விற்பனை செய்து வருகிறார்.
மேலும் கோவையில் விற்பனை செய்யப்படும் நகைகளில் மீதமுள்ள நகைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் பெங்களூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு திரும்ப அனுப்பப்படுவது வழக்கம். இந்த பணிகளை அவரது நகை கடையில் மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் திவேஷி(45) என்பவர் கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி முதல் கடந்த மாதம் 12-ந் தேதி வரை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக மீதமுள்ள 15 கிலோ 447 கிராம் தங்க நகைகள் அவரது நகைக்கடைக்கு லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் திருப்பி அனுப்பபட்டது. ஆனால் மார்க்கெட்டிங் மேலாளர் ஹனுமான் திவேஷி 1 கிலோ 867 கிராம் தங்கத்தை மட்டுமே ஒப்படைத்து விட்டு மீதமுள்ள ரூ.6 கோடி மதிப்பிலான 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை திருப்ப கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து ஷாகன்லால் சாத்ரி மார்க்கெட்டிங் மேலாளரிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஷாகன்லால் சாத்ரி கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மார்க்கெட்டிங் மேலாளர் ஹனுமான் திவேஷி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.