
கோவை கோட்டைமேட்டில் காரில் சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் தொடர்பாக 6வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர். இவர் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினராவார்.இவ்வழக்கில் முன்னரே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில், கடந்த 23-ம் தேதி அதிகாலை ஒரு காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (உபா) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 6வது நபராக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர் கான் என்பவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், கோவைக்கு விரைந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கின் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.