
சேலம் அருகே கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கோரி, ஆறு குழந்தைகளுடன் வந்த தாய் கண்ணீர் மல்க எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், காடையாம்பட்டி அருகே, தும்பிப்பாடியில் உள்ள ரெட்டியூர் புது காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து; பெயின்டர். இவரது மனைவி சத்யா, 35; தம்பதிக்கு, இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.திங்கட்கிழமை சத்யா தன் குடும்பத்துடன், நெத்திமேட்டில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து, கண்ணீர் மல்க எஸ்.பி., சிவகுமாரிடம் புகார் மனு வழங்கினார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நானும், என் கணவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லாததால், அரசு எங்களுக்கு புது காலனியில் வீட்டுமனை ஒதுக்கியது.
இதற்கு, அதே ஊரைச் சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை எங்கள் ஊரில் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தகராறு செய்தனர். பின், அரசு அதிகாரிகள் அளவீடு செய்து நட்ட முட்டுக்கல்லை பிடுங்கி வீசினர்.இதுகுறித்து, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், வருவாய் அதிகாரியிடம் கடந்தாண்டு புகார் அளித்தேன். அவர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். கடந்த, 31ம் தேதி, 11 பேர் கும்பல் எங்கள் வீட்டிற்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களுடன் கணவர் மாரிமுத்துவை தாக்கினர். காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எங்களால் இனியும் கொடுமையை தாங்க முடியாது; தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எந்த நீதியும் கிடைக்காது. இந்த காரணத்தால் குடும்பத்துடன், கருணை கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், கொலைகார கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, குழந்தைகளுடன் சத்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.