ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரூ.1 கோடியே 28 லட்சம் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டன. இது தொடர்பாக மூவரை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது பற்றிய விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. அத்திப்பள்ளி அருகே உள்ள சித்தாபுரம் பகுதியில் அலுவலகம் ஒன்று இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த நல்லக்கனி (53) என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அதே அலுவலகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார்.
இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தபுரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆடிட்டர், பைனான்ஸியர் என்று கூறி மக்களை ஏமாற்ற வந்தவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்தவர் நல்லக்கனி. கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவன் ஆவார். இவரிடம் 2 ஆயிரம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த நோட்டுக்களை கர்நாடக மாநிலத்தில் புழக்கத்தில் விட முடிவு செய்த அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கர்நாடகத்தில் அலுவலகம் போல தொடங்கி உள்ளார். மேலும் கள்ள நோட்டுக்களை கர்நாடகத்திற்குள் கொண்டு வந்து, அவற்றை கர்நாடகத்தில் கொடுத்து அதற்கு பதிலாக நல்ல ஒரிஜினல் நோட்டுக்களை பெற்று செல்வதற்காக முடிவு செய்தது தெரிய வந்தது.