
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது தமிழக அரசியலை திமுக பின்னோக்கி இழுத்துச் செல்கிறது என வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.
அண்ணாமலை வாக்காளர்கள் மத்தியில் மேலும் பேசியதாவது,
தென்னரசு வெற்றி பெற்றால் மட்டுமே திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். தென்னரசு சட்டப்பேரவைக்கு சென்றால்தான் திமுகவுக்கு ஒரு பாடத்தை கற்பிக்க முடியும். 517 வாக்குறுதிகளில் இதுவரை திமுக 49 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் 22 மாதங்களாகியும் அதனை வழங்கவில்லை. திமுக ஆட்சிக்குவந்தால் கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் எனக் கூறினர். ஆனால் அதுவும் வழங்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22 மாதங்களாக கோமாவில் இருக்கிறார். அதனால்தான் அமைச்சர்கள் இங்குவந்து பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழக அரசியலை திமுக பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. ஒரு வேட்பாளருக்கு எதிராக பல அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு வரும் 27 ஆம் தேதி வரைதான் ராஜ மரியாதை. 5 ஆண்டுகளில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதனையும் திமுக செய்யவில்லை.
என்னை நம்புங்கள் தென்னரசு வென்றால் மட்டுமே மகளிருக்கு ரூ.1000 மற்றும் சிலிண்டருக்கு ரூ.100 கிடைக்கும். திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட உதயநிதி வெளியிட்ட திரைப்படங்கள் அதிகம்” என பேசி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தென்னரசு வை வெற்றி பெற செய்ய கேட்டுக்கொண்டார்.