
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து வசதிகளுடன் இன்று துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அறையின் உள்ளேயும், வெளியேயும், சுற்றுவட்டார பகுதி என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது ஈரோடு மாநகராட்சியில் இருந்து தபால் ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.முகவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு எண்ணிக்கை துவங்கியது.
ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள்.
ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள். இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும்.