
பிகார் மாநில தொழிலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, திருப்பூர் காவல்நிலையம் முன்பு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநிலத் தொழிலாளியின் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக்கூறி ரயில்வே காவல் நிலையம் முன்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திரண்டனர்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (37), இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து, பின்னலாடைகளுக்கு அழுக்கு எடுக்கும்(ஸ்டெயின் ரிமூவர்)கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் ரயில்வே காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, நடத்திய விசாரணையில் சஞ்சீவ்குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக்குப்தா ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இதில், சஞ்சீவ் குமார் ரயில் நிலையத்துக்கு வருவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், தண்டவாளத்தைக் கடக்கும்போது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக சஞ்சீவ்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக்கூறி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரயில்வே காவல் நிலையம் முன்பாகத் திரண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.அவர்களுக்கு தேவையான வசதிகள் பாதுகாப்பு செய்து தரப்படும் என அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்.