
500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை : உழவை போற்றும் விழிப்புணர்வு திருமணம்!
பல்லடம் அருகே நடைபெற்ற திருமணத்தில், 500 கிலோ காய்கறிகளால் அமைக்கப்பட்ட மணமேடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
கோவை மாவட்டம், அரசூரைச் சேர்ந்த ராமசாமி – ஆனந்தி தம்பதியர் மகன் முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் – சரஸ்வதி தம்பதியர் மகள் கீர்த்தனா ஆகியோருக்கு பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் திருமணம் நடந்தது.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவின் பெற்றோர், உழவு தொழிலை முன்னிறுத்தும் வகையில், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையை அமைத்திருந்தனர்.
மண்டபத்தின் நுழைவாயில் வாழைமரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் முழுமையாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மணமேடை, பூசணி, முட்டைகோஸ், காலிபிளவர், வெண்டை, முருங்கை, கேரட், பாகல், புடலை உள்ளிட்ட பல்வேறு வகை காய்களில், 500 கிலோ எடையிலும், கரும்பு மற்றும் வாழை இலைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
உழவுத் தொழிலை முன்னிறுத்தும் வகையில் ஓவியங்களும், மணமேடையின் மேற்புறம், ‘உழவு என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தன.
வண்ண விளக்குகள், பல வகையான மலர்கள் மற்றும் பேனர்களால், ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்கள் மத்தியில், விவசாய தொழிலை முன்னிறுத்தும்படி நடந்த இத்திருமணம், பலராலும் பாராட்டு பெற்றது.