ஆதியோகியில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறும் ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழா! மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
பாரதத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழா கோவை ஆதியோகி முன்பு நாளை (செப்.23) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் அவர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்க உள்ளனர்.
ஆண்களுக்கான வாலிபால் போட்டி, பெண்களுக்கான த்ரோபால் போட்டி, இருபாலாருக்குமான கபடி போட்டிகள் என 4 பிரதான போட்டிகளின் இறுதிப் போட்டிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதியோகி முன்பு நடைபெறும். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வாகியுள்ள அணிகளின் வீரர், வீராங்கணைகள் மோத உள்ளனர்.
இதில் பங்கேற்கும் வீரர்கள் தொழில்முறை வீரர்கள் அல்ல. மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள், விவசாயம் மற்றும் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் என வித்தியாசமான பின்புலங்களில் இருந்து வந்து விளையாட்டு வீரர்களாக மாறியவர்கள் என்பது இத்திருவிழாவின் சிறப்பாகும்.
இப்போட்டிகளை காண்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாளை ஈஷாவிற்கு வருகை தர உள்ளனர். பிரதான விளையாட்டு போட்டிகளை தவிர்த்து பார்வையாளர்கள் பங்கேற்பதற்காக வழுக்கு மரம், உறியடி, கயிறு இழுக்கும் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய போட்டிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய் கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அத்துடன் கிராமிய உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. கிராமியத்தை கொண்டாடும் இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.
இறுதிப் போட்டியில் முதலிடம் பெறும் வாலிபால் அணிக்கு ரூ. 5 லட்சம், த்ரோபால் அணிக்கு ரூ.2 லட்சம், ஆண்கள் கபடி அணிக்கு ரூ. 5 லட்சம், பெண்கள் கபடி அணிக்கு ரூ.2 லட்சம் என உற்சாகமூட்டும் பரிசு தொகைகளும், பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சி தமிழின் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல்களில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் சுமார் 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் சுமார் 10,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட கிளெஸ்டர் போட்டிகள் 194 இடங்களில் நடத்தப்பட்டது.