கூண்டு வைத்து பிடிக்கப் பட்ட சிறுத்தை… சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது!

கோவை மதுக்கரையில் குடியிருப்பு பகுதியில் பிடிப்பட்ட சிறுத்தையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் அடைத்து தனி வாகனம் மூலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா கொண்டு வரப்பட்டு அங்குள்ள வனத்தில் விடுவிக்கப்பட்டது.

கோவை, மதுக்கரை வனச்சரகத்தில் கரடிமடை மோலப்பாளையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாடியது. அங்குள்ள ஆடுகளை வேட்டையாடி தின்றது. இரவு நேரத்தில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக கிராமமக்கள் வெளியே செல்ல அஞ்சினர். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்தனர்.

கடந்த 40 நாள்களாக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் ஓடிய சிறுத்தை புதன்கிழமை அந்த கூண்டில் வைத்த நாயை சாப்பிட வந்தபோது கூண்டில் சிக்கியது. இதையடுத்து பிடிபட்ட சிறுத்தையை தனி வாகனத்தில் வைத்து சத்தியமங்கலம் காட்டில் விட ஏற்பாடு செய்தனர்.

இந்த சிறுத்தையை பவானி சாகர் சரகம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடுவதற்கு பலத்த பாதுகாப்புடன் வனத்துறையினர் பிரத்யேக கூண்டில் அடைத்து கொண்டு வந்தனர். பவானிசாகர் அடுத்த கல்லாம் பாளையம் வனப்பகுதியில் விட தயாரானார்கள். கூண்டை திறந்து விடப்பட்ட போதும் சோர்வு காரணமாக வெளியே வராமல் கூண்டுக்குள் இருந்தது.

வனத்துறையிளர் கூண்டை உள்ள துவாரத்தின் வழியாக சிறுத்தை துரத்தினர். அதனைத் தொடர்ந்து கூண்டில் இருந்து பாய்ந்து ஓடிய சிறுத்தை காட்டுக்குள் சென்றதாக பவானிசாகர் வனச்சரகர் தெரிவித்தார்.