பாஜக., பெண் நிர்வாகியைத் தாக்கிய மதிமுக., குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பெண் தொண்டர் சசிகலா மோடிக்கு ஆதரவாகவும் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கம் எழுப்பியதால், மதிமுகவினர் அவரைத் தாக்கினர்.

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே வைகோ கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். காவிரி பிரச்னை, கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்துக்கான தேவைகளை மோடி நிறைவேற்றவில்லை என்று வைகோ குற்றம் சாட்டினார். இப்போராட்டத்தில் கலந்து கொள்ள மதிமுக தொண்டர்கள் பலர் அழைத்து வரப் பட்டிருந்தனர். இதனால், பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மதிமுக.,வினர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த போது, திடீரென பாஜக பெண் நிர்வாகி சசிகலா (24) என்பவர் கூட்டத்துக்குள் காலணி வீசியதோடு, பாஜகவுக்கு ஆதரவாகவும் மோடியைப் புகழ்ந்தும் ஆவேசமாகக் கோஷங்கள் எழுப்பினார். இதனால் மதிமுக தொண்டர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கொடி கட்டிய குழாய்களாலும் கம்புகளாலும் அவரைத் தாக்கினர்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கிருந்த போலீஸார் சசிகலாவை அருகில் இருந்த கடைக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, பின்னர் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த நேரத்தில் போலீஸாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு பாஜக., இந்துமுன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் பிரமுகர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அநாகரீக அரசியலைத் தொடர்ந்து நடத்தி வரும் வைகோ தமிழக அரசியலில் இருந்து துடைத்தெறியப் பட வேண்டியவர் என்று கோபத்துடன் கூறினர்.

பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன் இது குறித்துக் குறிப்பிட்ட போது, இன்று திருப்பூரில் பாரதபிரதமர் திரு.மோடி அவர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக மகளிரணி பொருப்பாளர் சகோதரி சசிகலா அவர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய மதிமுக குண்டர்களை பாஜக கடுமையாக கண்டிக்கிறது…சசிகலா அவர்களை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்…கலவரத்தை தூண்டிய வைகோ வை காவல்துறை உடனடியாக வைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்…

வைகோவின் அநாகரீகங்கள் தொடருமானால் வைகோ தமிழக அரசியலிலிருந்து துடைத்தெரியபடுவார்..தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கும் வைகோ போன்ற சமூக விரோதிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்…. என்று கூறினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...