பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை

கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கோவை ரேஸ்கோர்ஸ், டி.எஃப்.ஓ., காம்பவுண்ட் வளாக வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்தவர் தட்சிணாமூர்த்தி(43). கோவை கிணத்துக்கடவு பகுதியில் ஆர்.ஐ. – வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குருபிரசாத்(8), தனு வசந்த்(6) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, ‘வாக்கிங்’ செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற தட்சணாமூர்த்தி காலை 7 மணி அளவில், கோவை ரயில் நிலையம் சென்றார். அங்கே 6 ஆம் எண் பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்த கோவை- மயிலாடுதுறை சதாப்தி எக்ஸ்பிரஸ் முன், திடீரென பிளாட்பாரத்தில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். நொடிப் பொழுதில், அவர் மீது ரயில் சக்கரம் ஏறி, தலை துண்டாக்கி துடிதுடித்து பலியானார். இந்த ‘பகீர்’ காட்சியைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.ஐ.யின் திடீர் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தட்சிணாமூர்த்தி பலரிடம் ரூ.3௦ லட்சம் வரை கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கியதால், இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.