16/10/2019 11:17 AM
உரத்த சிந்தனை பூமிக்குள் புதையும் சாயக்கழிவால் புற்றுநோய்! பெருந்துயரத்தில் பெருந்துறை மக்கள்!

பூமிக்குள் புதையும் சாயக்கழிவால் புற்றுநோய்! பெருந்துயரத்தில் பெருந்துறை மக்கள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது. சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது என்று பெரும் துயரை வெளிப்படுத்துகிறார்கள் பெருந்துறை மக்கள்! 

-

- Advertisment -
- Advertisement -

‘பத்து வருடங்களுக்கு முன்னர் இது பொன்னு விளையுற பூமி. இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்து நிக்கிறோம். கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தான் எங்க வேதனையின் உச்சம் என்று குமுறுகின்றனர் பெருந்துறை விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ‘சிப்காட்’ தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஒவ்வொருவர் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.

சாய, தோல் கழிவுகள் நீர்நிலைகளிலும், பூமிக்குள்ளும் கலப்பதால் தமிழகத்தில் புற்றுநோயின் தலைநகரமாக ஈரோடு மாறி வருகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான ‘சிப்காட்’ அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு 2,500 ஏக்கர்.

சிப்காட்டில் 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. உயர் நீதிமன்றம் இதுபோன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சாய, தோல் கழிவுநீரை சுத்திகரித்து, முற்றிலும் நச்சுத்தன்மையற்றதாக மாற்றிய பின்னரே நிலத்தில் விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆனால் எந்த தொழிற்சாலையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததாக தெரியவில்லை. அப்படியே அமைத்திருந்தாலும் அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இதில் ஒரு சில தொழிற்சாலைகள் சாய, தோல் கழிவுகளை ‘போர்வெல்’ அமைத்து பூமிக்குள் நேரடியாக விடுகின்றன.

இதன் விளைவால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15 கி.மீ., பரப்பில் உள்ள எந்த ஒரு நிலத்திலும் விவசாயம் இல்லை. சாய, தோல் கழிவு நீரை சுத்திகரிக்காமல் சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால் 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில்  5 அடி உயரத்துக்கு நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.குளத்துக்கு அருகில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி  அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடுவதாக தொழிற்சாலைகள் தெரிவித்தாலும்  உண்மையில் அந்த இடம் மேடான பகுதி என்பதால் கழிவுநீர் அனைத்தும் குளத்துக்கே வந்து விடுகின்றன.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் போர்வெல் மூலம் பூமிக்குள் விடப்படுவதால் நீர் மாசடைகிறது. இதனால், சிப்காட்டிலிருந்து 1 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

சாய, தோல் கழிவுநீரால் சிப்காட்டை சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில் இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில் 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இது தவிர வயிறு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம். பொதுவாக, புற்றுநோய் ஏற்பட உணவு பழக்க வழக்கம், புகை பிடித்தல், மதுப் பழக்கம், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன் என ஐந்து காரணிகள் இருந்தாலும், ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது காரணியாக தண்ணீரால் புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறார்கள்.

நிலத்தடி நீர் மாசால், மனிதர்கள் குடிக்கும் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு டோட்டல் டிசால்வ்டு சால்ட் – டி.டி.எஸ்., 600 வரை இருக்கலாம். கடந்த ஆறு ஆண்டுகளில் ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது  15 ஆயிரம் டி.டி.எஸ்., என்றளவில் உள்ளது.

மேலும், கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என பல வேதிப்பொருட்கள் 30 முதல் 100 மடங்கு அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது. சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது என்று பெரும் துயரை வெளிப்படுத்துகிறார்கள் பெருந்துறை மக்கள்!

–  கே.சி.கந்தசாமி

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: