இந்தியர்களின் கலை, இலக்கியம், தொழில்நுட்பத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் கல்வி கொள்கையால் சிதைத்தனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 54 வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
இவ்விழாவில் ஆளுநர் பங்கேற்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவர்களை வாழ்த்தி ஆளுநர் பேசுகையில், ”இங்கு பட்டம் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நீங்கள் பெற்ற பக்கம் கடுமையானது கூர்மையானது. இதன் மூலம் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய மனமாற வாழ்த்துகிறேன்” என தமிழில் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, ”காமராஜர் பெயரில் தாங்கி இருக்கும் இந்த பல்கலைக்கழகம் குறித்த நிறைய பின்னணிகள் உள்ளன. அவரது வாழ்க்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. குறைந்த வயதில் அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். இதன் மூலமே அவரது அரசியல் வாழ்க்கையும் அங்கு இருந்தே தொடங்கியது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக கருத்துக்களை அவர் ஆழமாக பதிவு செய்துள்ளார். இவை இன்றைய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது.
ஆங்கிலேயர்கள் துவக்கம் முதலே 1600 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக ரீதியில் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள். 1750இல் இந்திய மாகாணங்களை கைப்பற்றி அவர்கள் அரசியல்வாதிகளாக மாறினர். அதிகார எல்லைகளை விரிவாக்கம் செய்து பிரித்தாளும் கொள்கையை இந்தியாவில் குதித்தவர்கள் வட அமெரிக்காவை போன்று இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிட்டன. அந்தத் திட்டம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை சாத்தியமாகவில்லை.
இந்தியாவில் மக்கள் தொகை பொருளாதாரம் வளர்ச்சியால் அவர்களால் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக கலை கலாச்சாரம் பண்பாடு பொருளாதார சிதைப்புகளை திட்டமிட்டு செய்தனர். இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தனர். உலகில் தலை சிறந்த கப்பல் படை நாடாக இந்தியா இருந்தபோதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு வந்து கப்பல்களின் அடிப்பகுதியில் பழுதுநீக்கும் தொழில்நுட்பங்களை அவர்கள் கற்றுக்கொண்டு அதை தன்வசப்படுத்திக் கொண்டனர்.
நமது தொழில்நுட்பங்களை மாற்றிக் கொண்டனர் அவர்களின் கல்வி கொள்கையைப் புகுத்தினர். அவர்களது காலனி நாடுகளிலும் அவர்களின் கல்விக் கொள்கையை கொண்டு வந்தனர். இதன் மூலம் மக்களை பிரித்தாள்வதே நோக்கமாக இருந்தது. இந்தியர்கள் கலை, இலக்கியம் தொழில்நுட்பங்களை அதிகம் உருவாக்கினர். இவற்றை ஆங்கிலேயர்கள் தங்களது கல்விக் கொள்கையால் சிதைத்தனர். இவற்றையெல்லாம் மீட்டவர் காமராஜர்.
அணைகள், நெய்வேலி என்எல்சி நிலக்கரி நிறுவனம் போன்ற எண்ணற்ற திட்டங்களை காமராஜர் கொண்டு வந்திருக்கிறார். இன்றைக்கு தொழில்நுட்ப அடிப்படையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த அடித்தளமாக இருந்தவர் காமராஜர். எனவே இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நீங்களும் பயணிக்கிறீர்கள் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்ற இலக்கு உங்களுக்கு உள்ளது அதற்கு தகுந்தார் போல உழைக்க வேண்டும். தற்போது நமது நாடு விழிப்புணர்வு அடைந்துள்ளது.
விழிப்புணர்வு உள்ள நாடுகள் 25 ஆண்டுகளில் தங்களது இலக்கை அடைவர். இதற்காக நாம் ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டும் அப்போது தான் மாற்றம் ஒன்று வர முடியும். நீங்கள் நன்றாக இருந்தால் போதும், வீடு, சுற்றுச்சூழல் சிறப்பாக இருந்தால் போதும் என்று இல்லாமல் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நாடு பற்றிய சிந்தனை வேண்டும். இதை மனதில் வைத்து உறுதிமொழியை எடுக்க வேண்டும்” என்றார்.
விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி பேசியதாவது இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் மனித வளம் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. உலகை ஆளும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கும். தேசிய கல்விக்கொள்கை, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தார். ஆளுநர், தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக புகார் தெரிவித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் விழாவை புறக்கணித்த நிலையிலும் திட்டமிட்டபடி இன்று விழா நடைபெற்றது.
