விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி வைத்த இமானுவேல் சேகரின் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இமானுவேல்சேகரின் 65 ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகர் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் கிராமத்தில் அமச்சியார்பட்டி பகுதியில் அரசு மற்றும் நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் அப்பகுதி மக்கள் இம்மானுவேல் சேகரனுக்கு சனிக்கிழமை சிலை வைத்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்பு தான் சிலை வைக்க வேண்டும் ஆகையால் நீங்கள் வைத்த சிலையை நீங்களே அகற்றி விடுங்கள் என தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் தகவல் கிடைத்து சார் ஆட்சியர் பிரித்திவிராஜ் விரைந்து வந்து
மற்றும் எஸ் பி மனோகர், வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்
சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட சிலையை சுற்றி தகர கொட்டகை அமைத்து சிலையை மறைத்து வைத்துள்ளனர்.
இன்று 11 ந்தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை புதிதாக அமைக்கப்பட்ட இம்மானுவேல் சேகரன் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகரக் கொட்டகை திறக்கப்படும். அப்போது பொங்கல் வைத்து குரு பூஜையை கொண்டாடிக் கொள்ளலாம்.
பின்னர் மீண்டும் தகரக் கொட்டகையால் புதிதாக அமைக்கப்பட்ட சிலை மறைத்து வைக்கப்படும். வருவாய்த்துறையினர் மற்றும் நீதிமன்றம் அனுமதி பெற்ற பிறகு நிரந்தரமாக சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகரக் கோட்டை அகற்றப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.
புதிய சிலை அமைக்கப்பட்டதாலும், போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டதாலும், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்ததாலும் மம்சாபுரம் அமைச்சியார்பட்டி பகுதியில் சுமார் 7 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்