தண்டவாள பராமரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டை- மதுரை-செங்கோட்டை பகல் ரெயில் 30-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் நாளை (16-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும். அதேபோல மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும். திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (16-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இதே போல சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரெயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரெயிலாக செயல்படாது. ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் ஆகியவை நாளை (16-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கோவில்பட்டியில் வருகிற 21, 22-ந் தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் இரு மார்க்கங்களிலும் சாத்தூர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. குமாரபுரம் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 28, 29-ம் தேதிகளில் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதுவும் தவிர இந்த ரெயில்கள் வருகிற 30-ம் தேதி மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதனால் பாலக்காடு செல்லும் ரெயில், மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும். தென்காசி-செங்கோட்டை இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி தேதிகள் வரை மதுரையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.