
பாஜக தமிழகத்தில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயல்கிறது என விருதுநகரில் இன்று நடந்த திமுக
முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.
விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் உள்ள பட்டம்புதூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,
தமிழகத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வரக்கூடிய நிதி வருவாயை ஒன்றிய அரசு பறிக்கிறது. நீட் தேர்வு மூலம் தமிழகத்தின் கல்வி உரிமைய பறித்து வருகிறது. ஏராளமான மக்கள் விரோத திட்டங்களை பாஜக ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அதை நாம் ஏற்க மாட்டோம். மேலும், தமிழகத்தில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியாகும். அண்ணாவின் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, கலைஞர் ஆட்சிக்குப் பின் நடப்பது ஸ்டாலின் ஆட்சியல்ல. இது திராவிட மாடல் ஆட்சியாகும் என அவர் தெரிவித்தார். இந்த ஆட்சிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது.
மேலும், திராவிடம் என்றால் அது ஒரு இனம் எனக் கூறுவார்கள். ஆனல், திராவிடம் என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், ஆண்-பெண் பேதமில்லாத, சமத்துவ, சமதர்மத்தை உருவாக்குவது தான் திராவிட மாடல் ஆட்சி.
ஒரு ராணுவ வீரர், நாட்டையும், வீட்டையும் பாதுகாப்பது போல கட்சியையும், ஆட்சியையும் ஒரு சேர வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறேன்.
கட்சி இருந்தால் தான் நமது கனவு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியும். அதன் மூலம் மக்களுக்கு பயனுள்ளவற்றை செய்ய முடியும்.
இந்த முப்பெரும் விழாவில் கலைஞர் முரசொலி மூலம் தொண்டர்களுக்கு எழுதிய 4047 கடிதங்கள் 54 தொகுதிகளாக தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. நான் எழுதிய திராவிட மாடல் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரின் கையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒட்டு மொத்த வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 283 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர். தனி நபர் வருமானத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழகத்தில் உள்ளன. பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை பி.டி.தியாகராஜன் தொடங்கினார். மதிய உணவுத் திட்டத்தை முதல்வர் காமராஜர் கொண்டு வந்தார். பின்பு, எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமாக அதை மாற்றினார். கலைஞர் வாரத்தில் 5 நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கினார்.
நான் மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். இந்த நாளை எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
கடந்த 2004 ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டில் கலைஞர் முழங்கினார். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம். 2019 ல் விருதுநகரில் நான் முழங்கினேன். இதையடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தோம். தற்போது முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெற்றுள்ளது.
எனவே, 2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமது. நாடும் நமதே என தெரிவித்தார்.
முன்னதாக, கோவையைச் சேர்ந்த சம்பூர்ண சாமிநாதனுக்கு பெரியார் விருது. கோவை மோகனுக்கு அண்ணா விருது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது, புதுச்சேரி சி.பி திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது ஆகியவற்றை தமிழக முதல்வர் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
