
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.
அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதை தொடர்ந்து பெருங்குடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு வில்லாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் சாலைகளின் இருபுறமும் குழுமி இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கீழவாசல், தவிட்டுச்சந்தை, பந்தடி, விளக்குத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திரளான அ.தி.மு.க.வினர் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கீழவாசல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், அவுட் போஸ்ட் வழியாக அழகர்கோவில் ரோட்டில் உள்ள கோர்ட்யார்டு நட்சத்திர ஒட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து ஓட்டல் வரை அனைத்து பகுதிகளிலும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சாலைகளின் இருபுறமும் நின்று அவரை வரவேற்றனர்.
இன்று பிற்பகலில் மதுரையில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் சென்று அங்குள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., வேலுநாச்சியார் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார்.
பின்னர் மாலை 6 மணியளவில் சிவகங்கை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.